திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் கிராமத்தில் 6 பேருக்குமேல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார்கள் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள். அதில் தச்சு தொழிலாளி ஒருவர், ஒருவாரத்துக்கு முன்பு கரோனா நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி ஜூன் 12ந்தேதி இரவு மரணமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது உடல் ஜூன் 13ந்தேதி வருவாய்த்துறை மற்றும் ஊரகவளர்ச்சித்துறை மூலமாக அக்கிராம சுடுகாட்டில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அந்த கிராம மக்களின் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கரோனா வந்தவர்களை எங்கள் கிராம சுடுக்காட்டில் புதைக்க வேண்டும் என்றால் கிராமத்திற்குள் வந்துதான் செல்ல வேண்டும், இதனால் எங்களுக்கும் கரோனா வந்துவிடும் என எதிர்ப்புக்காட்டினர்.
இதுதொடர்பாக அதிகாரிகள், மக்களிடம் உண்மை நிலையை எடுத்துரைக்க அதிகம் ஈடுபாடுகாட்டவில்லை. அதனால் அந்த கிராமத்துக்கு அருகில் உள்ள சமுத்திரம் ஏரிக்கரை என்கிற பகுதியில் குழியெடுத்து அங்கு புதைத்தனர். நீர் பிடிப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்வது சரியா என சிலர் கேள்வி எழுப்ப, அந்த கேள்வி அதிகாரிகளிடம் எடுபடவில்லை. இது சமுத்திரம் கிராம பகுதி மக்களை அதிருப்திக்குள்ளாக்கியது.
கரோனாவை கண்டு பயத்தில் உள்ள பொதுமக்களிடம், இறந்தவர்களிடமிருந்து கரோனா பரவாது என விழிப்புணர்வை ஏற்படுத்தி, வழக்கமாக புதைக்க வேண்டிய இடத்தில் புதைப்பதற்கு பதில், நீர்நிலையில் கொண்டு சென்று புதைத்துவிட்டு சென்றது சமூக ஆர்வலர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.