கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரை சந்தல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தனபால். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனது நிலத்தில் உள்ள பம்பு செட்டுக்கு மின்சார இணைப்பு பெறவேண்டி சடையம்பட்டு மின்சார வாரிய அலுவலகத்தில் முறைப்படி மனு அளித்திருந்தார். இதற்காக இவர் பல முறை சடையம்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மின்னிணைப்பு எப்போது கிடைக்கும் என நடையாய் நடந்து கொண்டிருந்திருக்கிறார். இதை கண்ட அங்குள்ள இளம் மின் பொறியாளர் குபேந்திரன், போர்மேன் விஜயகுமார் ஆகியோர் தனசேகரனிடம் பணம் இல்லாமல் எதுவும் நடக்காது லஞ்சம் கொடுத்தால் உங்கள் விவசாய பம்ப் செட்டுக்கு விரைவில் மின் இணைப்பு கிடைக்கும். இல்லை என்றால் நீங்கள் இப்படி அலைந்து கொண்டிருக்க வேண்டியதுதான் என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்களிடம் தனசேகர் விபரமாக கேட்டபோது 3,500 ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்தால் உடனடியாக மின் இணைப்பு கிடைக்கும் என்று இருவரும் கூறியுள்ளனர். முறையாக நமக்கு வழங்க வேண்டிய மின் இணைப்புக்கு இவர்கள் லஞ்சமாக பணம் கேட்கிறார்களே என்று அதிர்ச்சி அடைந்த தனபால் விழுப்புரத்திற்கு சென்று அங்குள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்களின் ஆலோசனையின் படி அவர்கள் கொடுத்த ரசாயனப் பொடி தடவிய லஞ்சப் பணத்தை தனபால் சடையம்பட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த இளம் மின் பொறியாளர் குபேந்திரன், போர் மேன் விஜயகுமார் ஆகியோரிடம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பணத்தை கொடுக்கும்போது அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி மோகன், இந்த வழக்கில் தீர்ப்பளித்து அதில் மின்பொறியாளர் குபேந்திரனுக்கு பேருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் ஃபோர்மேன் விஜயகுமாருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். விவசாயிகள் ஏகப்பட்ட கஷ்டங்களுக்கிடையே விவசாயம் செய்து, வீட்டுக்கும் நாட்டுக்கும் உணவளித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய அரசு அதிகாரிகள் இப்படி லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வது வருத்தமளிக்கிறது என்கிறார்கள் விவசாயிகள்.