கோவை மாவட்டம், நல்லாம்பாளையம் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் வேணுகோபால் (35). இவர், நேற்று முன்தினம் (26.07.2021) மாலை நல்லாம்பாளையம் சாலையில உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது வேணுகோபாலின் பழைய நண்பர் சுதாகர் என்பவர் அங்கு சென்றுகொண்டிருந்தார்.
இதைப் பார்த்த வேணுகோபால் சத்தமாக, “டேய்..சுதாகர்.. டேய்..சுதாகர்..” என சுதாகரை அழைத்தார். இதை சுதாகர் விரும்பவில்லை. “ஏன் பொது இடத்தில் என் பெயரைச் சொல்லி சத்தம்போட்டு கூப்பிடுகிறாய்?” என கேட்டு சுதாகர், வேணுகோபாலை திட்டியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ளவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதில் ஆத்திரமடைந்த சுதாகர், தனது நண்பர்கள் கோபாலன், கோபிநாத் ஆகியோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
உடனே, கோபாலனும் கோபிநாத்தும் சம்பவ இடத்திற்கு மீண்டும் வந்து அங்கிருந்த வேணுகோபாலை அழைத்து சத்தம் போட்டதோடு, கத்தியால் குத்தினர். இதில் காயமடைந்த வேணுகோபால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வேணுகோபால் துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கோபாலன், துடியலூர் சுப்பிரமணியம் பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் கோழி என்கிற கோபிநாத் (21) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணைக்குப் பிறகே பெயரைச் சத்தம்போட்டு கூப்பிட்டதற்காக இந்த தாக்குதல் நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது தெரியவரும்.