கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ. திட்டத்தை விரிவுபடுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க உறுப்பினர்களிடம் இருந்து இ.எஸ்.ஐ., தொகையை வசூலிக்கக் கூடாது என, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்திற்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இ.எஸ்.ஐ., எனும் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தை, கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தி, தமிழகத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை 2010- ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்நிலையில், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அல்ல என்பதால், இ.எஸ்.ஐ. திட்டத்தை கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தும் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத ஊழியர்களும், தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அல்ல எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இ.எஸ்.ஐ.க்கு மனு அளித்ததாகவும், அதற்கு பதிலளித்த இ.எஸ்.ஐ., சட்டத்தை அமல்படுத்தவிருப்பதாக தெரிவித்ததால், அரசு அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், இ.எஸ்.ஐ.யில் பதிவு செய்ய வற்புறுத்தக் கூடாது எனவும், பணத்தை வசூலிக்கக் கூடாது என உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இ.எஸ்.ஐ.க்கு உத்தரவிட்டனர். அதுவரை, தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க உறுப்பினர்களிடம் இருந்து இ.எஸ்.ஐ. தொகையை வசூலிக்கக் கூடாது எனவும் தடை விதித்தனர். மனுதாரர் சார்பாக வழக்குரைஞர் விஜய் ஆனந்த் ஆஜரானார்.