ஒரு வீதியா இரண்டு வீதியா ஈரோடு மாநகரில் உள்ள 60 வார்டுகளில் உள்ள 700 வீதிகளிலும் சாலையை துண்டு துண்டாக வெட்டிப் போட்டு குண்டும், குழியுமாக பல இடங்களில் மரண குழிகளாக மாற்றி விட்டது ஈரோடு மாநகராட்சி. அதற்கு மாநகராட்சி நிர்வாகம் கூறும் காரணம் பாதாள சாக்கடை பணி, புதை வடமின் கேபிள், புதிதாக கொண்டுவரப்படும் கூட்டு குடிநீர் திட்ட பணி என மூன்று வேலைகளும் பூமிக்குள் செல்வதால் வேறு வழியில்லை ஆனால் இந்த பணிகளை விரைவில் முடித்து விடுவோம் என்பதைதான் கடந்த இரண்டு வருடமாக கூறுகிறார்கள் அதிகாரிகள்.
எதுவும் இதுவரை நிறைவேறி சாலைகள் சீர் செய்யப்படவில்லை. இரண்டு சக்கர, நான்கு சக்கரம், பேருந்துகள், நடந்து செல்லும் மக்கள் வரை இந்த குழிகளுக்குள் விழுந்து கை, கால், இடுப்பு முறிவதும் பலர் விபத்தில் இறப்பதும் ஈரோட்டில் நடந்து வருகிறது. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், மக்கள் உயிருடன் மோதும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஈரோடு திமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட திமுக மாசெவும் முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமி தலைமை தாங்கினார். இதில் திமுக.மாவட்ட துணை செயலாளர் ஆ.செந்தில்குமார், மாவட்ட அவைத் தலைவர் குமார்முருகேஸ், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், கொள்ளை பரப்பு துணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் உட்பட நிர்வாகிகளும் நூற்றுக்கணக்கான திமுகவினரும் கலந்து கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.