Skip to main content

மாணவர்களிடம் மோசடி! ஏமாந்த அரசுக் கல்லூரி முதல்வர்!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

Fraud with Government College students!

 

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரத்தில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி இளைஞர்களின் வாழ்க்கை மேம்பாடு என்கிற பெரியல் பயிற்சி பட்டறை நடந்துள்ளது. 


வேலூர் மாவட்டத்தின் உள்ள பிரபல தனியார் நிகர்நிலை பல்கலைகழகத்தின் வேந்தராக உள்ள விஸ்வநாதன் என்பவர், கிராமப்புற மாணவ – மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக யுனிவர்சல் ஹயர் எஜிகேஷன் என்கிற பெயரில் அறக்கட்டளை நடத்துகிறார். அந்த அறக்கட்டளையும் – அரசு கலைக்கல்லூரியும் இணைந்து தான் ஒருநாள் பயிற்சி பட்டறை நடத்தியுள்ளது.


இந்த பயிற்சி நடந்த மறுநாள் ஏப்ரல் 26ஆம் தேதி கல்லூரி முதல்வர் பாமாவை தினேஷ்குமார் என்பவர் தொடர்புக்கொண்டு, பல்கலைக்கழகத்தில் பணி உள்ளது. ஒருவருக்கு 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம். 10 பேருக்கு பணி தயாராகவுள்ளது. தகுதியான 10 பேரை உடனடியாக எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு பயோடேட்டாவை அனுப்பச்சொல்லுங்கள் எனச் சொல்லியுள்ளார். அதோடு பதிவுக் கட்டணம் தலா ஒருவர் 2500 ரூபாய் உடனே செலுத்த வேண்டும் எனக்கூறினாராம். 

 

இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் பாமா, அவர் கல்லூரியிலிருந்து 11 மாணவ – மாணவிகளை இதற்கு பரிந்துரைத்துள்ளார். அந்த மாணவர்களும், உடனே தங்களிடமிருந்த ரூ.1500, 2300, 1000, 2000 என ஜீபே மூலமாக பணத்தை அனுப்பியுள்ளனர். மாலைக்குள் அப்பாய்மெண்ட் ஆர்டர் வந்துவிடும் எனச்சொல்லியுள்ளார் அந்த மர்ம நபர். ஆனால், பணம் வந்தபின் அந்த நம்பர் ஆப் செய்யப்பட்டுள்ளது.


இதுக்குறித்து பாதிக்கப்பட்ட மாணவ – மாணவிகள் ஆன்லைன் வழியாக ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறைக்கு புகார் அனுப்பியுள்ளார்கள். ஒரு மாணவி நேரடியாகவும் புகார் தந்துள்ளார். இதுக்குறித்து காவல்துறை விசாரிக்கவேயில்லை என்கிறார்கள்.


இதுக்குறித்து அரக்கோணம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பாமாவை நாம் தொடர்புக்கொண்டு கேட்டபோது, ”சம்மந்தப்பட்டவர் பல்கலைகழக ஊழியர் எனச் சொல்லி விவரங்களை கேட்டார். மாணவர்களும் பணம் அனுப்பினார்கள், பிறகுதான் அவர் ஏமாற்றிவிட்டார் எனத்தெரிந்தது. அவர் அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஊழியர் எனச்சொல்கிறார்கள்” என்றார்.


மாணவர்கள் தந்த புகாரில் குறிப்பிட்டுள்ள யுனிவர்சல் ஹயர் எஜிகேஷன் டிரஸ்ட் ஊழியர் அன்பழகன் என்பவரை தொடர்புகொண்டு கேட்டபோது, நாங்கள் நிகழ்ச்சி நடத்திவிட்டு வந்த மறுநாள் யாரோ இப்படி பேசியுள்ளார்கள். அங்குள்ள ப்ளேஸ்மெண்ட் அலுவலர் என்னை தொடர்புக்கொண்டு பல்கலைக்கழகத்தில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்களா எனக்கேட்டார். இல்லை. இங்கு வெளிப்படையாக விளம்பரம் தந்தே பணிக்கான ஆட்களை தேர்வு செய்வார்கள் என விளக்கமாகச்சொன்னேன். வேலை எனச்சொல்லி ஏமாற்றியது குறித்து எங்களுக்கு தொடர்பில்லாதது” என்றார்.


ஆன்லைன் வழியாக, நேரடியாக புகார் தந்தும் இராணிப்பேட்டை காவல்துறை விசாரிக்கவில்லை என்கிறார்கள். இதுக்குறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, இந்த மோசடியில் அந்த பல்கலைகழகத்தின் பெயர் வருகிறது, அதனால் விசாரிக்காமல் வைத்துள்ளது என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்