ஜல்லிக்கட்டு போராட்டங்களில் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டு பிரபலமானவர் ஜூலி. பிக்பாஸில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதன் மூலம் மேலும் புகழ் வெளிச்சம் அவர் மீது பரவியது. அதனைத் தொடர்ந்து சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்தார். பல்வேறு டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துவருகிறார் ஜூலி.
இந்தச் சூழலில், சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார் ஜூலி. அந்தப் புகாரில், ‘அமைந்தகரையைச் சேர்ந்த மனிஷ், தனியார் சலூன் கடை ஒன்றில் பணியாற்றிவருகிறார். அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் காதலாக மலர்ந்தது. 2017 முதல் இருவரும் நெருக்கமாக வாழ்ந்துவந்தோம்.
நான்கு ஆண்டுகால காதல் வாழ்க்கையில், என்னைத் திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்தார். அந்த நம்பிக்கையின் பேரில் இருசக்கர வாகனம், 2 பவுன் தங்கச் சங்கிலி என கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை மனிஷுக்கு கொடுத்திருக்கிறேன்.
இந்தச் சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம், பெற்றோர்கள் இந்தக் காதலை ஏற்க மறுப்பதாகச் சொல்லி காதலை முறித்துக்கொண்டார். நாங்கள் காதலித்த காலத்தில் நடந்ததைச் சொல்லி, என்னிடம் பணம் கேட்டு தொடர்ச்சியாக தொல்லைக் கொடுத்துவருகிறார். இதனால் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால், என்னை திருமணம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றியும், பண மோசடியும் செய்த மனிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காதலன் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார் ஜூலி.
இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.