காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் நாளை (11/01/2022) முதல் உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐ-போன்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி, கடந்த மாதம் இந்த ஆலையின் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் தொழிலாளர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உடன்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதற்கட்டமாக, நாளை (11/01/2022) உற்பத்தியைத் தொடங்க உள்ளது. இதற்காக, ஆலை இன்று திறக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. வைரஸ் தொற்று இல்லாதவர்கள், நாளை முதல் மீண்டும் பணிக்கு செல்வர். அதேபோல், நாளை 200 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 300 தொழிலாளர்களுடன் உற்பத்தியைத் தொடங்க ஆலை நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் கூறுகின்றன.
இதனிடையே, வருவாய்துறை சார்பாக, விடுதிகளைக் கண்காணிப்பதற்கும், சுகாதார சீர்கேடுகள் மற்றும் சுத்தமான உணவு ஊழியர்களுக்கு கொடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்கும், தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.