கரோனா வைரஸ் தடுப்ப மற்றும் டாஸ்மாக் மதுபானங்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏஐடியூசி) தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பெரியசாமி, பொதுச்செயலாளர் தனசேகரன், பொருளாளர் கோவிந்தராஜ் மின் அஞ்சலில் அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அதில்,
புதுவகை கரோனா வைரஸ் கோவிட் 19 நோய் தொற்று பரவி வருவது, பொது சுகாதாரப் பேரிடராக ஏற்பட்டுள்ளது. இந்த 'ஆட்கொல்லி' நோய் தொற்றுப் பரவலை தடுக்க சமூக இடைவெளி, தனித்திருத்தல், பி.பி.இ. என்கிற தனிநபர் நோய்தடுப்புக் கருவிகள் அணிந்து கொள்ளுதல் போன்ற நடைமுறைகள் கட்டாயம் என வலியுறுத்தப்படுகிறது.
இந்தத் தொற்று பரவல் சமூக சங்கிலி தொடரை முறிக்க 24.03.2024 ஆம் தேதி முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கம் (Lock down) செய்யப்பட்டது. தற்போது இந்த முடக்க காலம் வருகிற மே 3 ஆம் தேதி வரை நீடிக்கும் என மாண்புமிகு பிரதமர் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு நடவடிக்கையால் டாஸ்மாக் மதுபானக் கடைகளும், மதுக் கூடங்களும் 24.03.2020 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மூடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.
http://onelink.to/nknapp
01. மதுபானங்கள் பாதுகாப்பு தொடர்பானது
தமிழ்நாடு அரசு குற்றவியல் சட்டம் பிரிவு 144ன் படி தடை உத்தரவு மற்றும் தொற்று நோய்கள் சட்டம் 1897 பிரிவு 2ன் படி மாவட்ட எல்லைகள் மூடும் உத்தரவும் பிறப்பித்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் முடக்கம் செய்யும் உத்தரவு வெளியிட்டது
24.03.2020 ஆம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதும், மாலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்ததும் மதுபான விற்பனை பணத்தை வங்கிகளில் செலுத்த பெரும் சிரமங்களை ஏற்படுத்தியது. இந்தப் பணிக்காக வெளியில் செல்ல வேண்டிய டாஸ்மாக் பணியாளர்களுக்கு நோய் தடுப்பு கருவிகள் மற்றும் வாகன வசதிகள் செய்து தர வேண்டும் எனக் கோரப்பட்டது.மேலும் எந்தவித பாதுகாப்பும் இல்லாத காரணத்தால் மாலை 6மணிக்கு முன்பே விற்பனை கணக்கு முடிக்கபட்ட நிலையில், அதன் பிறகு விற்பனையான பணம் தாமதமாக வங்கியில் செலுத்தப்பட்டு வருகிறது.
02. நாடு முடக்கம் செயலுக்கு வந்த 24.03.2020 ஆம் தேதியில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு அதீத அளவில் மதுபானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் காரணமாக கடைகளில் தேங்கியுள்ள மதுபானங்கள் பாதுகாப்பு முக்கியப் பிரச்சனையாக முன்னுரிமை பெற்றது.
மதுபானங்கள் பாதுகாப்பு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் பணியாளர்களுக்கு திட்டவட்டமான உத்தரவுகள் ஏதும் வழங்கவில்லை. பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்டு, மதுபானங்கள் திருடப்படும் குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன. சில மாவட்டங்களில் மாவட்ட மேலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் உடந்தையாகி மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் தவறுகளும் நடைபெறுகின்றன.
காலதாமதமாக நிலவரத்தை உணர்ந்த டாஸ்மாக் நிர்வாகம் மதுபானங்களை பாதுகாப்பான இடங்களில் மாற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டது. இதில் மதுபானங்களை இடம் மாற்றும் வாகனங்கள் ஏற்பாடும், ஏற்று, இறக்குக் கூலி போன்ற செலவுகளும் பணியாளர்கள் ஏற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தால் நிர்ப்பந்தம் செய்து நிறைவேற்றப்பட்டது. மேலும் இடமாற்றம் செய்யும்போது காவல்துறை, அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள், டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் அழுத்தத்தால் மதுபானங்கள் இருப்பு எண்ணிக்கையில் குறைவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது
இதனைத் தொடர்ந்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு பணியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஈடுபட வேண்டும் என காவல்துறை நிர்வாகம் நிர்பந்தித்து வருகின்றது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் ஒரு திட்டவட்டமான உத்தரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இதில் டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் சரி, மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்ட இடங்களிலும் சரி ஓரிரு பணியாளர்களை மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது மதுபானங்கள் மற்றும் பணியாளர்கள் உயிருக்கும் பாதுகாப்பாக அமையாது. மேலும் மது நுகர்வோர்களுக்கு கள்ள மது வியாபாரிகளால் ஏற்படும் ஆபத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த நிலையில் குறிப்பிட்ட எல்லைக்குள் 'ரோந்து' பணி மேற்கொள்வது பயனுள்ளதாக அமையுமா என்பதை பரிசீலிக்க வேண்டும்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கோவிட் 19 தொற்று நோய் தடுப்புக் கருவிகள், வாகன வசதிகள் வழங்குவதுடன் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தலா ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள காப்பீடு செய்து தர வேண்டும்.
03. மதுக் கடைகளின் திருட்டு சம்பவங்களில், எந்த வகையிலும் தொடர்பில்லாத பணியாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்று, அவர்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் திருப்பி வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏஐடியூசி) சார்பில் தங்கள் மேலான கவனத்திற்கு சமர்பித்துக் கொள்கிறோம். இவைகள் மீது உரிய உத்தரவுகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக்கூறியுள்ளார்.