Skip to main content

குடும்ப சொத்து விவகாரம்; ரகளையில் ஈடுபட்ட தி.மு.க. கவுன்சிலர்! 

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Family property issue complaint on DMK counselor

 

ஈரோடு பிருந்தா வீதியில் சுப்புரஞ்சனா என்பவர் தனது கணவர் சபரிகிரிதர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு சுப்புரஞ்சனாவின் அப்பா,  பிருந்தா வீதியில் உள்ள தனக்குச் சொந்தமான இரண்டரை சென்ட் வீட்டை மகள் சுப்புரஞ்சனாவிற்கு கொடுத்துள்ளார். இது சுப்புரஞ்சனாவின் சகோதரர் அருண்குமாருக்கு பிடிக்கவில்லை. 

 

இதன் காரணமாக சுப்புரஞ்சனாவிற்கும் சகோதரர் அருண்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுப்புரஞ்சனா தனது பெயரில் உள்ள இடத்தை கணவர் சபரிகிரிதர் பெயருக்கு மாற்றம் செய்துள்ளார். இதனால், அருண்குமார், பிருந்தா வீதியில் உள்ள சுப்புரஞ்சனாவின் வீட்டுக்குச் சென்று பிரச்சனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

 

அருண்குமாரின் உறவினரான அப்பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி 36வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பழனியப்பா செந்தில், அருண்குமாருக்கு ஆதரவாக சுப்புரஞ்சனாவிடம் தனது கூட்டாளிகளுடன் சென்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில் நேற்று தி.மு.க. கவுன்சிலர் பழனியப்பா செந்தில் மற்றும் அருண்குமார் ஆகியோர் அடியாட்களுடன் சென்று சுப்புரஞ்சனா குடியிருந்த வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை வெளியே எறிந்து அங்கிருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானதை அறிந்தவர்கள் சி.சி.டி.வி. கேமராக்களையும் உடைத்து எறிந்துள்ளனர். மேலும், அங்கிருந்த அனைவரும் கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

 

இதனால் மனமுடைந்த சுப்புரஞ்சனா தனது கணவருடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், தி.மு.க.வைச் சேர்ந்த 36வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில், தங்களது 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும், கொலை மிரட்டல் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளைக் காண்பித்தும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்