சிதம்பரம் அருகே கண்டியாமேடு கிராமத்தை சேர்ந்த அறிவுக்கண்ணன், அவரது மனைவி லதா தம்பதியினர். வடக்கு வீதியில் உள்ள வங்கி ஒன்றில் ரூ. 3 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தெற்கு வீதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு இருசக்கர வாகனத்தின் டேங்க் கவரில் பணத்தை வைத்துக்கொண்டு நகையை மீட்க வந்துள்ளனர்.
இதனை நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவர்கள் வங்கி அருகே வரும்போது சாலையில் 20 ரூபாய் நோட்டை போட்டுவிட்டு கீழே கிடப்பது உங்கள் பணமா? என்று கேட்டுள்ளனர். அப்போது அந்த பணத்தை இவர்கள் எடுக்க முயற்சித்தபோது கண் இமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ. 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர்.
இதுகுறித்து சிதம்பரம் காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி உள்ளிட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கடந்த ஆண்டு இதே வங்கியில் ரூ. 1 லட்சம் பணத்தை எடுத்து வந்த தம்பதியிடம் மேலவீதியில் கீழே 10 ரூபாய் நோட்டுகளை போட்டுவிட்டு, அவர்களது கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.