தமிழக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், கடந்த ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தின் போது பாதுகாப்புக்காக சென்றிருந்தார். அப்போது டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி.ஐ தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தாமாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சிபிசிஐடி போலீசார். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் 80க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆறு மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாத் முன்னிலையில் இந்த வழக்கு சம்பந்தமான 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால் 197 சட்டப்பிரிவின் கீழ் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்ப வேண்டும். அதன்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்குமாறு அனுமதியளித்த பிறகுதான், சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அந்த வழிமுறைகளின் படி பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் புகார் அளிக்க விடாமல் அப்போது பணியில் இருந்த மத்திய மண்டல ஐ.ஜி, டி.ஐ.ஜி, எஸ்.பி ஆகிய மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழக அரசுக்கு சிபிசிஐடி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.