Skip to main content

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கலைஞர் பெயர் சூட்ட உத்தரவிடக்கோரி கலைஞர் தமிழ்ப்பேரவை வழக்கு!

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

former chief minister kalainger name metro rail station

 

 

தமிழகத்தின் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு காரணமான, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பெயரை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வைக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 

கலைஞர் தமிழ்ப்பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி 3 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு,  முன்னாள் முதல்வர்களின் பெயர்களைச் சூட்டினார். 

 

அதன்படி, ஆலந்தூர் நிலையத்திற்கு "அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ" எனவும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு "புரட்சித்தலைவர் டாக்டர் ராமச்சந்திரன் மெட்ரோ ரயில் நிலையம்" எனவும், கோயம்பேடு நிலையத்திற்கு "புரட்சித்தலைவி டாக்டர் ஜெயலலிதா மெட்ரோ" ரயில் நிலையம் என்றும் பெயர்கள் மாற்றப்பட்டன.  

 

சென்னையின் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்டம்,  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சி காலத்தில்,  கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதியுடன், திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 

 

இந்நிலையில், திட்டத்திற்கு காரணமாக இருந்த கலைஞரின் முயற்சியை வரலாற்றில் இருந்து மறைக்கவும், அரசியல் நோக்கத்துடனும், மற்ற தலைவர்களின் பெயர்கள் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வைக்கப்பட்டுள்ளன.  

 

அதனால்,  தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ நிலையத்திற்கு "டாக்டர் கலைஞர் கருணாநிதி டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம்" என்ற  பெயரை வைக்க வேண்டும் என்று வழங்கப்பட்ட மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்