Skip to main content

ஜெயலலிதா வாழ்க்கை இணையதள தொடர் தடை கோரிய வழக்கு!- கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக வெளியிட தடைகோரிய ஜெ.தீபாவின் மனுவுக்கு டிசம்பர் 11- ஆம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் ‘தலைவி’ என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ‘குயின்‘ என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர். 

Jayalalithaa's life biography web series case chennai high court


இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகிய பெயர்களில் தயாரிக்கவோ, விளம்பரப்படுத்தவோ, திரையிடவோ கூடாது என  தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தீபா தரப்பில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கும் பணிகள் தற்போதுதான் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், ஆனால் இணையதள தொடர்களாக தயாரிக்கப்பட்டவை வரும் சனிக்கிழமை வெளியிட உள்ளதாகவும் தகவல் வந்துள்ளதால், தன் மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Jayalalithaa's life biography web series case chennai high court


அப்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில், தீபா தொடர்ந்த வழக்கின் ஆவணங்கள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
 

இவற்றை பதிவு செய்த நீதிபதி, வழக்கு ஆவணங்களை கௌதம் வாசுதேவ மேனன் தரப்புக்கு உடனடியாக ஆவணங்கள் கொடுக்க தீபா தரப்புக்கும், அந்த மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்ய கௌதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 11- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்