கொடைக்கானலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுவாக மலைப்பகுதிகளில் கோடைக்காலங்களில் காட்டுதீ ஏற்படும் நிலையில், சீதோஷ்ன நிலை மாற்றத்தின் காரணமாக தற்போதே காட்டுத்தீ ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக கொடைக்கானலில் ஒரு சில பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதிகள் மட்டுமல்லாது வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களிலும் தீயானது பரவி வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் பெருமாள் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இதனால், கிட்டத்தட்ட 50 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. தொடர்ந்து வனச்சரக பணியாளர்கள் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ தடுப்பு கோடுகள் இடப்பட்டுள்ளதால் விரைவில் தீ பரவல் கட்டுப்படுத்தப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர்வாசிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வரவேற்பை பெற்ற நிலையில் அதில் இடம்பெற்றுள்ள குணா குகையை பார்வையிட இந்த கோடையில் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அன்று தேனி, குரங்கணி பகுதியில் கொழுக்குமலை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில், ட்ரெக்கிங் சென்ற 23 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.