கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை அமலில் உள்ளது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கூடாது என மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில் சென்னை காசிமேட்டில் மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், படகுகளில் உள்ள இரும்பு கம்பிகளில் உப்பு காற்றினால் ஏற்பட்டுள்ள பழுதை வெல்டிங் செய்து சரி செய்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுவாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் சுமார் ஒரு வாரகாலம் கடலில் தங்கி மீன்பிடித்து வருவார்கள். அப்போது பிடிக்கப்படும் மீன்களை ஐஸ் வைத்து பதப்படுத்துவார்கள். மேலும் ஒரு வாரத்திற்கு குடிநீருக்காக குடிநீர் கேன்களையும் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர்.