அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் ஆர்.எஸ். மாத்தூர் 108 ஆம்புலன்ஸ் (TN 72 G 1188 )க்கு உஞ்சினி கிராமத்தில் இருந்து அவசர அழைப்பு ஒன்று வந்தது. இந்த அவசர அழைப்பை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆம்புலன்ஸுடன் உஞ்சினி கிராமத்திற்கு சென்றனர்.
மாலை சுமார் 6:15 மணியளவில் ஆம்புலன்ஸுடன் உஞ்சினிக்கு சென்ற ஊழியர்கள் அவசர அழைப்பு விடுத்தவரை செல்போனில் தொடர்புகொள்ள முயற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருப்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையிலும் விடுமுறை எடுக்காமல் மக்கள் சேவையை எண்ணி பொதுமக்களின் உயிர் காக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கிய கும்பல் மீது மருத்துவ பாதுகாப்பு சட்டம் 48/2006 ன் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும் என 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.