சென்னையை அடுத்த அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வம் - சுமதி தம்பதியினர்- இவர்களுக்கு 10 வயதில் ராஜஸ்ரீ என்ற மகள் உள்ளார். சிறுமி ராஜஸ்ரீக்கு நீண்ட நாட்களாக இரண்டு காதிலும் காது குத்திய துளையில் கட்டி இருந்தது.
அந்த கட்டியை சரி செய்ய அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி ராஜஸ்ரீ கடந்த ஒரு மாதமாக சிகிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் சிறுமி ராஜஸ்ரீக்கு காதில் ஆபரேசன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் ஆபரேசன் முடிந்து சிறுமி வெளியே வந்த போது அவரது தொண்டையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இதனை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் சிறுமியின் உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர்.
டாக்டர்களின் மருத்துவ குறிப்பில் காது அறுவை சிகிச்சை எனவும், அவர்கள் கொடுத்துள்ள மருத்துவ கையேட்டில் காது அறுவை சிகிச்சை எனவும் பதிவிடப்பட்டு இருந்தது. சிறுமியின் உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுமி ராஜஸ்ரீக்கு ஆபரேசன் செய்த அதே நாளில் மற்றொரு சிறுவனுக்கு தொண்டையில் ஆபரேசன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்து இருந்தனர். குழப்பத்தில் சிறுமிக்கு மாற்றி ஆபரேசன் செய்ததாக தெரிகிறது. மேலும் சிறுமியும் தொண்டையில் உள்ள பிரச்சனை காரணமாக அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
உறவினர்கள் ஏன் இப்படி கவனிக்காமல் சிகிச்சை செய்தீர்கள் என்று கேட்டதற்கு, மருத்துவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக சிறுமியின் தாயார் கூறியுள்ளார்.
சிறுமியின் தாயார் சுமதி செய்தியாளர்களிடம், எனது மகள் ராஜஸ்ரீக்கு காது குத்தி அந்த இடம் கட்டியாக மாறிப்போயிருந்தது. அதற்காக ஒரு மாதம் இந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தோம். ஆபரேசனுக்காக அட்மிட் பண்ணினோம். ஆபரேசனுக்காக உள்ளே அழைத்துச் சென்றனர். காதில் ஆபரேசன் பண்ணுவதற்கு பதிலாக நல்லா இருக்கும் தொண்டையில் ஆபரேசன் பண்ணி, இவ்வளவு பெரிய சதையை எடுத்திருக்கிறார்கள். டாக்டரிடம் ஏன் இப்படி பண்ணீங்க என்றதற்கு தெரியாம பண்ணிவிட்டோம் என்கிறார்கள். நாங்க தெரியாம பண்ணிட்டோம் என்று சொல்றோம். இதற்கு மேல நீங்க என்னப் பண்ணனுமோ பண்ணிக்கோங்க என்கிறார்கள். என் குழந்தைக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்படக்கூடாது என்றார். தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயில் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.