
விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக விநாயகர் சிலைகளை செய்து நீர்நிலைகளில் கரைப்பவர்கள் அதில் விதைகளை வைத்து நீர்நிலைகளில் கரைத்தால் மரங்கள் வளரும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்பு நகரங்களில் தொடங்கிய விநாயகர் ஊர்வலங்கள் கடந்த பல ஆண்டுகளாக கிராமங்களிலும் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதுடன் குறிப்பிட்ட நாளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைத்துவிட்டு வருவது வழக்கமாக உள்ளது. இதற்காக ரசாயனம் கலந்த கலவைகளில் பிள்ளையார்கள் செய்யக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு வடிவங்களில் களிமண் விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது. இதற்கென உள்ள கலைஞர்கள் சிலைகளை வடிவமைக்கின்றனர். முன்னதாக காவல்துறை அனுமதி பெற்று ஊர்வலங்கள் நடத்தப்படுகிறது.
இந்தநிலையில் இந்த ஆண்டு முதல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்யப்படும் களிமண் விநாயகர் சிலைகளில் பல்வேறு மர விதைகளை வைத்து செய்தால் நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட பிறகு அந்த விதைகள் முளைத்து மரமாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும்.. அவர்கள் கூறும் போது..
ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை களிமண் பிள்ளையார் சிலைகள் செய்து வர்ணம் தீட்டப்படுகிறது. அந்த பிள்ளையார் சிலைகளில் ஆங்காங்கே வேம்பு, புங்கன், புளி, போன்ற மர விதைகளை பதித்து வைத்தால் நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட பிறகு விதைகள் கரை ஒதுங்கி முளைத்து வளரும் வாய்ப்புகள் உள்ளது. அதே போல பெரிய பிள்ளையார் சிலைகளில் பனை, மா, நெல்லி, நாவல் போன்ற மரங்களின் விதைகளை களிமண்ணோடு பிசைந்து செய்துவிட்டால் அந்த விதைகளும் முளைத்து மரமாகும். சிறிய பிள்ளையார் சிலைகளில் 20 விதைகளும், பெரிய சிலைகளில் 100 விதைகள் வரை வைத்து விதைப் பிள்ளையார்களை உருவாக்கினால் விரைவில் மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் இந்த ஆண்டு முதல் விதைப்பந்துகள் போல விதைப்பிள்ளையார்களை உருவாக்கினால் மேலும் மரங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதுடன் நீர்நிலைகளின் கரைகளையும் பலப்படுத்த முடியும் என்றனர்.