''மாணவர்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்கட்டும். அதை தடுப்பதற்கு நீங்கள் யார்? ஒரு மொழியை படிக்கக் கூடாது என தடுப்பதும் திணிப்பு தானே'' என பாஜகவின் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா பேசுகையில், '' என்ன மொழிக் கொள்கை வேண்டும் என்பதை படிக்கும் மாணவர்களும் அவர்களுடைய அப்பா அம்மாவும் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அமலாக்கத்துறை வழக்கில் இருக்கிற பொன்முடி அதைச் சொல்லக் கூடாது. திராவிடம் என்றாலே ஊழல், கொள்ளை. பொன்முடி மந்திரியாக இருப்பதற்கே அனுமதி இல்லாதவர். நான் பொன்முடியை கேட்டுக்கொள்கிறேன், 294 இன்ஜினியரிங் காலேஜில் 980 ஆசிரியர்கள் ஆதார் கார்டை போலியாக கொடுத்து சேர்ந்துள்ளார்கள். அந்த துறையைக் கண்காணிப்பதற்கு வக்கற்ற, திறமையற்றவராக பொன்முடி உள்ளார். நீங்கள் யார் எந்த மொழியை படிக்க வேண்டும் என டிசைட் பண்ண.
பொன்முடிக்கும் முதுகெலும்பு இருந்தால் சமஸ்கிருதம் இந்தி சொல்லிக் கொடுக்கும் வேளச்சேரியில் இருக்கும் சன்ஷைன் பள்ளியை முதலில் இழுத்து மூடுங்கள். உங்கள் தலைவர் கலைஞர் கொண்டு வந்தது தானே சமச்சீர் கல்வி. அந்த பள்ளியில் சமச்சீர் கல்வியை கொடுக்க மாட்டீர்களா? அப்பொழுது நீங்களே கலைஞரை மதிக்கவில்லை என்று அர்த்தம். உங்களைப் போன்ற வேசதாரிகள் திமுக தலைவர்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளின் முன்னாடி போராட்டம் நடக்கும். முதலில் அதை சமச்சீர் கல்வியாகவும் மாற்றங்கள். இல்லை என்றால் எதுவும் பேசாதீர்கள். மாணவர்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்கட்டும். அதை தடுப்பதற்கு நீங்கள் யார்? ஒரு மொழியை படிக்க கூடாது என தடுப்பதும் திணிப்பு தானே''என்றார்.