கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பத்தில் தனியார் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அனல் மின்நிலையத்திற்கு பின்புறம் புதுக்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் வசித்து வருகின்றனர். அனல்மின் நிலையத்தில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ரயில்கள் மூலம் நிலக்கரியை இறக்குமதி செய்து போர்போல் மின்நிலையத்தில் வைத்துள்ளனர். அப்படி வைத்துள்ள நிலக்கரித்தூள்கள் காற்றோடு கலந்து புதுக்குப்பம் கிராமத்தில் பரவி குடிநீர் மற்றும் உணவு பொருள்களை மாசுபடுத்தி வருகிறது. இதுகுறித்து அனல்மின் நிலையம் மற்றும் சம்பந்தபட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து எந்த நடவடிக்கையும் இல்லை.
மேலும், இந்த அனல்மின்நிலையத்துக்கு கடல் வழியா நிலக்கரியை இறக்க துறைமுகம் கட்டும் பணியும் புதுக்குப்பம் கிராமத்தில் நடந்து வருகிறது. இந்த துறைமுகத்தால் புதுக்குப்பம் பாதிப்படையும் என்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து துறைமுகம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும், அனல்மின்நிலையத்தை மூட வேண்டும் என்று 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் துறைமுகம் பணிகள் நடத்துவரும் சாலையோரம் அமர்ந்து கடந்த இருநாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஞாயிறன்று நடந்த போராட்டத்தில் அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் காற்றில் பறக்கும் கரித்துகள்களால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறோம் என்று வாயில் துணியை கட்டிக்கொண்டு நூதனபோராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடல்வழியாக நிலக்கரி இறக்கும் துறைமுகம் அமைக்கும் பணியை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர் போராட்டத்தால் கடந்த ஐந்து நாட்களாக அந்த பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கசெல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது.