திருவண்ணாமலை மாவட்டம் பள்ளி கல்வித்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்கிற நிகழ்ச்சி தனியார் பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்துயிருந்தது மாவட்ட கல்வித்துறை. மாவட்டத்தில் உள்ள 2508 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பயிலும் 194940 மாணவிகள் தங்களது பெற்றோர்க்கு கடிதம் எழுதினர்.
இந்த கடிதத்தில் தங்களது பெற்றோரிடம் பெண் பிள்ளைகள் என்ன எதிர்பார்க்கிறது, தங்களது ஆசைகள், விருப்பங்கள், எண்ணங்கள் போன்றவற்றை கடிதம் மூலம் வெளிப்படுத்தலாம், உயர் படிப்பு படிக்க வைக்க வேண்டும் என வலியுறுத்தலாம், சிறு வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டாம் என வலியுறுத்தலாம் எனக்கூறப்பட்டது. அதன்படி ஒரே நேரத்தில் மாவட்டத்தில் பலயிடங்களில் மாணவிகள் கடிதம் எழுதினர்.
இதுப்பற்றி தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, நீங்கள் எழுதும் கடிதத்தில் சிறந்த 25 கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த கடிதம் எழழுதிய மாணவிகள் என் அலுவலகத்துக்கு வந்து ஒருநாள் முழுவதும் என் பணிகளை பார்வையிட வைக்கவும், மதிய உணவு என்னுடன் உண்ணவும் ஏற்பாடு செய்யவுள்ளேன், இதேபோல் மாவட்ட உரிமையியல் நீதிபதியும் செய்வார். இதன் மூலம் உங்களுக்கு தன்னம்பிக்கை வளரும் என்றார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 6 ஆயிரம் மாணவிகள் கலந்துக்கொண்டனர். இப்படி மாவட்டம் முழுவதும் எழுதப்பட்டுள்ள 1 லட்சத்து 90 ஆயிரம் கடிதங்களை தபால்துறை சிறப்பு ஏற்பாடாக அந்தந்த பள்ளியில் வைத்துள்ள தபால் பெட்டியில் மாணவிகள் செலுத்தினர்.