![Flooding in railway tunnel; stoppage of traffic](http://image.nakkheeran.in/cdn/farfuture/RiKvt5AhM1Y4_0muAtA9ztX-GApl0_G00h0qyaVLE48/1668150519/sites/default/files/inline-images/n21986.jpg)
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வேளச்சேரி ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சுரங்கப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுவாகவே வேளச்சேரி பகுதியில் மழைக்காலத்தில் வெள்ள நீர் தேங்குவது என்பது சாதாரண விஷயமாக இருக்கும் நிலையில், தற்பொழுது மழைநீர் வடிகால் பணிகள் ஓரளவு செய்யப்பட்டுள்ளதால் பெரிய அளவில் குடியிருப்புப் பகுதிகளில் நீர் தேங்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தெற்கு ரயில்வே பராமரிப்பில் உள்ள சுரங்கப் பாதையில் மழை நீர் அதிக அளவு தேங்கி நிற்பதால் அந்த வழியாக போக்குவரத்தானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தாம்பரம், மடிப்பாக்கம் செல்வோர் அச்சுரங்கப் பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.