கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்து வருவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் விமானம் தூத்துக்குடி விமான நிலையத்திற்குள் தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து உணவுப் பொருட்களை பிரித்து ஹெலிகாப்டர் மூலம் விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் மீதமுள்ள 530 பயணிகளுக்கு உணவு வழங்க மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்ற நிலையில் தற்பொழுது வரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டு டன் உணவு, தண்ணீருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் பாதிக்கப்பட்ட பகுதிககளில் உணவு வழங்க முடியாத சூழல் ஏற்ட்டுள்ளது. ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள 530 பயணிகளை மீட்க முடியாமல் திரும்பி சென்றது. இதனால் பயணிகளை மீட்கும் பணி தாமதமடைந்துள்ளது. ரயில் நிலையத்தில் ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ள நிலையில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் மூன்றாவது நாளாக 530 பயணிகள் தவித்து வருகின்றனர்.