நெல்லையை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டது. மாவட்டம் அறிவிக்கப்பட்ட பின்பு தென்காசி ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன், எஸ்.பி.யாக சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலராக கல்பனா ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். முறைப்படி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 22ம் தேதியன்று துவங்கி வைத்தார். ஆனால் கலெக்டர், எஸ்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் போன்றவர்களுக்கான முறையான அலுவலகங்கள் அமைக்கப்படாமல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரிகளும் பணிக்காக தயாராக உள்ள நிலையில் கலெக்டரோ ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் ஒருபகுதியில் இருந்தபடியும், அங்கேயே மாவட்ட வருவாய் அலுவலரும் உடன் இருந்து பணியாற்ற வேண்டியநிலை உள்ளது. எஸ்.பி. அலுவலகமோ இன்றுவரை தேர்வு செய்யப்படவில்லை. எஸ்.பி.சுகுணாசிங், டி.எஸ்.பி. அலுவலகத்திலிருந்தபடி செயல்படுகிறார்.
மேலும், கலெக்டர் அலுவலக பணியாளர்களுக்காக உத்தேசிக்கபட்ட இடமோ கட்டுமானப்பணியிலிருக்கிறது. இவர்களுக்கான அடிப்படை கட்டமைப்புகள் எதுவும் ஏற்படுத்தப்படாமல் மாவட்டம் உதயமாகிவிட்டது. தவிர தென்காசி மாவட்டப்பணிகள் 25ம் தேதி முதல் செயல்படுமென்றிருக்கிறார் ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன். இதனிடையே கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக செயல்படுவதற்கு தமிழ்நாடு அரசின் பழைய சேமிப்பு கிடங்கு கட்டிடத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்குவதற்காக வெள்ளிக்கிழமை அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 20 ஆயிரம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட அந்த கிடங்கை கலெக்டர் அலுவலமாக செயல்படுவதற்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய மாவட்டப் பணிகளான மக்கள் குறைதீர் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கூட்டம் மற்றும் மாவட்ட வளர்ச்சி தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் உள்ளிட்டவைகள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வைத்தே நடத்தப்படுவது என்பது மிகவும் சிரமமாகப்படுகிறது. தவிர, மக்கள் குறைதீர் கூட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அருகிலுள்ள ஒரு திருண மண்டபம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே அனைத்து சிரமங்களையும் கருத்தில் கொண்டு கலெக்டர் அலுவலகம் முறையாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.