திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் குடியிருப்புகள் முழுவதும் இடிந்து வருகின்றன. பயிர்கள் முழுகி அழுகும்நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து உயிர் இழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.
குடிமராமத்துப்பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறி வரும் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் குடிமராமத்து பணிகளுக்காக ஒதுக்கிய பணத்தை முறையாக செலவழித்து, ஆறுகள், குளங்கள், வாய்க்கால்களை தூர்வாரி இருந்தால் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
குடிமராமத்து திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக கூறப்படும் ஆயிரம் கோடி ரூபாயில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. ஆகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசே பொறுப்பேற்று உடனே நிவாரண உதவிகளை அறிவிக்கவேண்டும் என்றார்.
மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலிருக்க எல்லா வேலைகளையும் அதிமுக அரசே செய்து கொண்டிருக்கிறது. புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முதல்வர் கூறுவது மோசமான மோசடி தனமானது.
உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது நிறுத்த பழனிச்சாமி அரசு சதி வேலை செய்துகொண்டுதான் இருக்கிறது. திருவிழாக் கூட்டத்தில் திருடிவிட்டு ஓடுபவன் திருடன் திருடன் என்று கூச்சலிட்டு தப்பித்துக்கொள்ளுவதைப் போலவே அதிமுக அரசு செயல்படுகிறது என்று தெரிவித்தார்.