தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. சுமார் 3 மணி நேரத்தில் இது பெரும்பாலும் நகராமல் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி இது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 50 சென்டிமீட்டர் மழையும், புதுச்சேரியில் 46 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதுவே இதுவரை பதிவான மழையின் அளவுகளின் தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சமாகும். இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி 21 சென்டிமீட்டர் மழை புதுவையில் பதிவாகியிருந்தது. தற்போது 46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் சென்னையில் மழை நீர் அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையில் தேங்கிய மழைநீரை மோட்டார் பம்ப் செட் இயந்திரம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை பட்டாளம் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதே சமயம் புயல் முன்னெச்சரிக்கையாக நேற்று முன்தினம் (29.11.2024) இரவு முதல் சென்னை தியாகராயநகர் ஜி.என். செட்டி ரோடு மேம்பாலம், வேளச்சேரி மேம்பாலம் மற்றும் ராயபுரம் மேம்பாலத்தில் மீண்டும் கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் புயல் கரையைக் கடந்த பின்னரும் வேளச்சேரி, ஜி.என். செட்டி ரோடு உள்ளிட்ட மேம்பாலங்களில் இருந்து கார்களை அதன் உரிமையாளர்கள் பலரும் அங்கிருந்து எடுத்துச் செல்லாமல் உள்ளனர்.