கடலூர் மாவட்டத்திலுள்ள 49 மீனவ கிராமங்களில் சுமார் 2,000 ஃபைபர் படகுகள், 500 விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் நேரடியாகவும், 20 ஆயிரம் மீனவர்கள் மறைமுகமாகவும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் விசைப்படகுகள் அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதல் குதிரைத்திறன் கொண்ட என்ஜின்களைப் பயன்படுத்துவதாகவும், அரசு நிர்ணயித்த 40 எம்.எம். அளவுக்குக் குறைவான வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்துவருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிறு தொழில் செய்யும் மீனவர்களை அச்சுறுத்திவரும் நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தடுக்கக் கோரியும், நாட்டு வலை பயன்படுத்தி மீன் பிடித்துவரும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால் மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (13.12.2021) நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல் வழியாக வந்து மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கடலூர் டி.எஸ்.பி. கரிகால் சங்கர் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து மீன்வளத்துறை அலுவலகம் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் மனு அளித்தனர். மேலும், தங்கள் படகுகளின் உரிமத்தையும் ஒப்படைத்தனர். இதற்குப் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், மற்ற மீனவக் கிராம தலைவர்களுடன் கலந்துபேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.