Skip to main content

‘ஆத்திரக்காரனிடம் சூதானமா நடந்துக்கணும்..’- சில வழக்குகள்.. சில உண்மைகள்!

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

சில நேரங்களில் சில வழக்குகள் ஆச்சரியமூட்டும்.  அப்படி ஒரு வழக்கில்தான்  மதுரை – திடீர் நகர் காவல் நிலைய போலீசார் வீரையா என்பவரை கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனர். வழக்கு விபரம் இதுதான் – மதுரை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளியான தமிழரசனிடம் ரவுடி வீரையா கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தார். 
 

1

 

 


தமிழரசன் பறிகொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 200 ரூபாய்தான். இந்த சொற்ப தொகையை மிரட்டிப் பறித்த வீரையா மதுரை ஹீரா நகரைச் சேர்ந்த ரவுடியாம். இவர் ‘நானும் ரவுடிதான்’ ரகத்தைச் சேர்ந்தவர் போலும். இங்கே தொகை பெரிதல்ல! கத்தியைக் எடுத்தார் அல்லவா? அதுதான், வீரையாவைக் கம்பி எண்ண வைத்துவிட்டது. 

வீரையா வழக்கெல்லாம் ஒரு வழக்கா? ரூ.220 கடனுக்காக கொலையே நடந்திருக்கிறது. புதுவை முத்தரையர்பாளையத்தைச் சேர்ந்த ரங்கநாதன், அரியாங்குப்பம் டோல்கேட்டைச் சேர்ந்த கனிராஜுவிடம் ரூ.220 கடன் வாங்கியிருந்தார். கொடுத்த கடனைக் கேட்டபோது தகராறாகி ரங்கநாதனைக் கனிராஜு கொலை செய்துவிட்டார்.  அட, பீடிக்காக கொலை செய்த அசகாய சூரர்களும் இருக்கின்றனர்.  திருப்பூர் – தேத்தம்பாளையத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதியான ராமசாமியை சுரேஷ் என்ற கைதி கோவை மத்திய சிறையில் வைத்துக் கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டார். காரணம் – பீடி தகராறுதான்.  கரூர் – சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். வீரமலை என்ற முதியவரிடம் ஓசி பீடி கேட்டார். பீடி தர மறுத்ததோடு திட்டவும் செய்தார் வீரமலை. அவ்வளவுதான்! ஆத்திரமான நாகராஜ், வீரமலையைக் கட்டையால் தாக்கிக் கொன்றுவிட்டார். நாகராஜுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. 
 

i

 

 


பீடிக்காக மட்டுமல்ல.  தீப்பெட்டிக்காகவும் கொலை நடந்திருக்கிறது.   பல்லடம் – சேடபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.  அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரனிடம் பீடி பற்ற வைப்பதற்கு தீப்பெட்டி கேட்டார். தன்னிடம் தீப்பெட்டி இல்லையென்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார் குணசேகரன். தீப்பெட்டி தராத ஆத்திரத்தில் குணசேகரனின் வீட்டில் கற்களை வீசினார் கிருஷ்ணமூர்த்தி. கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கிவிழ, குணசேகரனும் அவருடைய மகன் பிரதீப்பும் மரக்கட்டையால் அடித்து கிருஷ்ணமூர்த்தியைக் கொலை செய்துவிட்டனர். 

இதுபோன்ற வழக்குகளும் சம்பந்தப்பட்ட நபர்களும்  ‘ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு” என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். சாதாரண விஷயங்களுக்குக்கூட உணர்ச்சிவசப்படும் இந்த உலகத்தில் நாம்தான் பார்த்து சூதானமாக நடந்துகொள்ள வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்