‘மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி தற்கொலைக்கு முயற்சித்தார்; பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்..’ என்று அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மீடியாக்களுக்கு பேட்டியளித்துவரும் நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய சிறையில் நடந்த கைதிகளுக்கான போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றார் நிர்மலாதேவி என சிறைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல் சொன்னார்கள்.
பொதுவாக, சிறையிலுள்ள பெண் கைதிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில், மகளிர்தின விழாவைக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. அதன்பிரகாரம், நேற்று மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் நடந்த மகளிர் தின விழாவில், சிறை (பெண்) ஊழியர்கள் மற்றும் பெண் கைதிகள் கலந்துகொண்டனர். அப்போது நடந்த போட்டிகளில், பேச்சுப் போட்டி மற்றும் கும்மிப்பாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார் நிர்மலாதேவி.
மதுரை சிறையிலுள்ள பெண் கைதிகளிலேயே அதிகம் படித்தவராகவும், கல்லூரி பேராசிரியராகவும் இருந்தவரல்லவா நிர்மலாதேவி! பரிசு வென்றது பெரிய விஷயமே கிடையாது. ஜாமின் கிடைக்காத மன உளைச்சலில் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக சிறையில் அடைபட்டிருக்கும் அவர், மன இறுக்கம் தளர்ந்து போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுதான் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.