Skip to main content

இலங்கை ரோந்து படகு மோதி மீனவர் உயிரிழப்பு; தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு

Published on 01/08/2024 | Edited on 01/08/2024
Fisherman attacked in Sri Lankan patrol boat collision; Tamil Nadu Government Relief Notification

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

இத்தகைய சூழலில் வழக்கம் போல் நேற்று (31.07.2024) காலை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 1500 பேர் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி நேற்று மாலை கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினரின் படகு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவரான கார்த்திகேயன் என்பவரது விசைப் படகு மீது மோதியுள்ளது.

அந்த படகில் இருந்த ராமச்சந்திரன், மூக்கையா உள்ளிட்ட 4 மீனவர்கள் கடலில் விழுந்து மாயமாகினர். இதில் படுகாயமடைந்த 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகத் தகவல் வெளியாகியது. இதில் மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஐந்து மணி நேரமாக மீனவர்கள் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்த பகுதியில் தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இலங்கை ரோந்து படகு மோதி உயிரிழந்த தமிழக மீனவர் மலைச்சாமி குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்