சேலம் மேட்டூர் அணையிலிருந்து ஒரு டன் மீன்களை சென்னைக்கு கொண்டு வந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சதாசிவம். மேட்டூர் அணையில் கெண்டை மீன்கள் அதிக அளவில் கிடைக்கும். அந்த மீன்களின் ருசி மிகுதியாக இருக்கும் என அம்மீனை உட்கொண்ட அனைவரும் கூறுவர்.
தற்போது, சட்டமன்றக் கூட்டம் நடந்து வருவதால், எம்.எல்.ஏ சதாசிவம் தனது தொகுதியில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து கிடைக்கும் மீன்களை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு விருந்து வைக்க விரும்பினார்.
இதற்காக மேட்டூர் அணையிலிருந்து ஒரு டன் மீன்களை சென்னைக்கு கொண்டுவந்த எம்.எல்.ஏ சதாசிவம், காவேரி ஆற்று நீரில் பயரிட்டு விளையும் புழுங்கல் அரிசியையும் எடுத்து வந்தார். அதுமட்டுமின்றி மீன் உணவு சமைப்பதில் சேலத்தில் பிரபலமாக இருக்கும் சமையல் கலைஞர்களையும் அழைத்து வந்தார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமூகநலக் கூடத்தில் அரிசி சாதம், மீன் குழம்பு, மீன் வறுவல், மீன் ரசம், முட்டை ஆகிய ஐட்டங்களுடன் விருந்து தயாரிக்கப்பட்டது. அவை மிக நேர்த்தியான பாக்ஸ்களில் பார்சல் செய்யப்பட்டு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அவர்களின் உதவியாளர்கள் உள்ளிட்ட 500 நபர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே அனுப்பி வைத்தார் சதாசிவம். மீன் உணவை ரசித்தும் ருசித்தும் சாப்பிட்டவர்கள், "மேட்டூர் அணையின் மீன்களுக்கு தனி ருசிதான்" என்று சதாசிவத்தை பாராட்டியுள்ளனர். இந்த உணவு தயாரிப்பதற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.
ஏற்கனவே இதே போன்று, 2006-2011-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பா.ம.கவின் ஜி.கே.மணி மீன் விருந்து கொடுத்து மகிழ்ந்துள்ளார். தற்போது அதே பாணியில் மீன் விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் மேட்டூர் பா.ம.க. எம்.எல்.ஏ சதாசிவம். இந்த விருந்து உபசரிப்புதான் சட்டமன்ற வளாகத்தில் சுவாரஸ்யமாகப் பேசப்பட்டது.