திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பதவி ஏற்றுக்கொண்டவுடன் முதல் வேலையாக மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ராம்மோகன் ராயுடுவை சந்தித்து மூன்று கோரிக்கையை அளித்திருந்தார்.
திருச்சி விமான நிலைய ஓடு பாதையை விரிவாக்கம் செய்வதற்கு போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் நலனைக் கருத்தில் கொண்டு திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்குவதற்கு இருதரப்பு விமான சேவை ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கிட வேண்டும், திருச்சியில் இருந்து தலைநகர் டெல்லிக்கும், கொச்சினுக்கும் நேரடி விமானங்கள் இயக்கப்பட வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இதனையேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் மூன்று கோரிக்கைகளையும் பரிசீலித்துத் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து துரை வைகோ திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி விமான நிலைய இயக்குனர் டி.ஆர்.ஓ ராஜலட்சுமி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஒன்றிணைத்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த நிலையில் துரை வைகோவின் முதல் முயற்சியின் முதல் வெற்றியாகத் திருச்சியில் இருந்து அபுதாபிக்குக் கூடுதலாக வாரம் 4 முறை இண்டிகோ விமானம் இயக்கப்பட உள்ளது என்ற தகவல் இன்று வெளியாகியுள்ளது. இது அபுதாபியில் பணிபுரிந்து வரும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.