சிவகாசி மாவட்டம் ஆணையூர் அருகே பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. 25 அறைகள் கொண்ட இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு அனைத்து விதமான பட்டாசுகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று வழக்கமாக பணியாளர்கள் தங்களது பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது பட்டாசுக்கு மருந்து செலுத்தும் அறையில் வெடி விபத்து நடந்தது. அதன் மூலம் அந்த மருந்து செலுத்தும் அறையும், அதற்கு பக்கத்திலிருந்த அறையும் இடிந்து தரைமட்டமாகின. இதில் மருந்து செலுத்தும் பணியிலிருந்த இருளாயி, அய்யம்மாள், குமரேசன், சுந்தர் ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெயிலின் தாக்கத்தால் மூலப்பொருட்களின் மீது ஏற்பட்ட உராய்வின் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அய்யம்மாள், குமரேசன், சுந்தர் என மூவர் உயிரிழந்தனர். இருளாயி தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் திரு. குமரேசன் த/பெ.சுப்புராஜ், திரு. சுந்தர்ராஜ் த/பெ.ராமகிருஷ்ணன் மற்றும் திருமதி. அய்யம்மாள் க/பெ. கருப்பையா ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி. இருளாயி க/பெ. சுந்தர்ராஜ் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் திருமதி. இருளாயி அவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.