விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் – கங்கரக்கோட்டை கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த கேசவனுக்குச் சொந்தமான இந்தியன் நேஷனல் பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இங்கு நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரிக்கின்றனர். 60 அறைகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (22-4-2023) வழக்கம்போல் பட்டாசு உற்பத்திக்கான வேலைகள் நடந்தபோது, மதிய நேரத்தில் அதிக வெப்பத்தினால் வேதிப்பொருட்கள் வைத்திருந்த அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு, இரண்டு அறைகள் தரைமட்டமாயின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஜெயசித்ரா என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார். வெடி விபத்து நடந்த இடத்திற்கு ஏழாயிரம்பண்ணை மற்றும் சாத்தூர் தீயணைப்புத்துறை வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. வேறு யாரேனும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என்று மீட்புப் பணியில் அத்துறையினர் ஈடுபட்டனர். இவ்வெடி விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
வெடி விபத்தில் உயிரிழந்த மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்தை வழங்கிட உடனடியாக உத்தரவிட்டு ஆறுதலும் தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.