நாமக்கல் அருகே, இரட்டைக் கொலை வழக்கில் கைதான தீயணைப்பு நிலைய வீரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (70). இவருடைய மனைவி நல்லம்மாள் (60). கடந்த அக். 11ம் தேதி இரவு அவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தம்பதியினர் இருவரையும் அடித்துக் கொலை செய்து விட்டு, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்று விட்டார்.
பரமத்தி வேலூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வரும் ஜனார்த்தன் (32) என்பவர்தான் கணவன், மனைவி இருவரையும் கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளை அடித்துச் சென்றவர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரை மூன்று நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைது செய்தனர். ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க, நகைகளை கொள்ளை அடித்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனார்த்தனனை மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.