வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இங்கு வேலூர் அருகே உள்ள நஞ்சு கொண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 10 பேர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் புகார் மனுவை வழங்கினர். அந்த மனுவில், ‘தனியார் பைனான்ஸ் வங்கிகளில் லோன் பெற்று நாங்கள் டிராக்டர் வாங்கினோம். மாதாமாதம் கடன் கட்டிக்கொண்டு வந்தோம், பின்னர் எங்களால் லோன் கட்ட முடியவில்லை. கடன் தந்தவர்கள் எங்களுக்கு நெருக்கடி தந்துகொண்டு இருந்தனர்.
அப்போது பைனான்ஸ் நிறுவனத்தினர் எங்களுக்கு ஒருவரை அறிமுகப்படுத்தினர். அவர் உங்க லோன் பணத்தை நாங்களே கட்டித் தருகிறோம், நாங்கள் வண்டியை விற்று வங்கிக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டிவிட்டு மீதி பணம் தருகிறோம் என கூறி வண்டியை எடுத்து சென்றனர்.
தற்போது 3 மாத காலம் ஆகியும் பணத்தை தரவில்லை, வண்டியை விற்கவில்லை என்றால் எங்களது வண்டியை திருப்பித்தரவேண்டும் அதையும் செய்யவில்லை. வங்கி தரப்பு, வண்டி எடுத்துச்சென்றவர்களை தொடர்புகொண்டால் சரியாக பதில் தர மறுக்கிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன், மனு மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.