Skip to main content

மாணவர்களுக்கான இறுதித்தேர்வு; தேதியில் மாற்றம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை?

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

Final Examination for Students; Department of School Education to change the date

 

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் புதிதாக பரவும் வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு இருக்கிறதா எனக் கண்டறிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டன. முகாம்களில் தங்களை பரிசோதனை செய்து கொண்டவர்களில் 2600க்கும் மேற்பட்டவர்களுக்கு ஹெச்3என்2 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொற்றுக்குள்ளானவர்கள் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

 

அதேபோல் புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களாக 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்திருந்தார். அதன்படி ஜனவரி மாதத்தில் மட்டும் 35 பேரும், பிப்ரவரி மாதத்தில் 38 பேரும், மார்ச் மாதத்தில் 12 ஆம் தேதி வரை 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த பாதிப்புகளில் 18 பேர் 5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் என்பதும், மற்றொரு 18 பேர் 6 முதல் 15 வயது வரையிலான பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

புதுச்சேரியில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் அதிக அளவில் புதிய வைரஸ் தொற்று பரவி வருகிறதாகவும், இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் 26 ஆம் தேதிவரை 1 முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் கூறினார். இந்த உத்தரவு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

 

இந்நிலையில், தமிழ்நாட்டில் மாநிலக் கல்வித்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி பொதுத்தேர்வு துவங்க இருக்கிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் தொற்று பரவி வருவதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகள் நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. 

 

ஏப்ரல் மாதத்தின் இறுதியில் நடைபெற இருந்த 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த தேர்வுகளை ஏப்ரல் 14 ஆம் தேதி முதலே நடத்தலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு இன்னும் சில மணிநேரத்தில் வெளியிடப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்