ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்று வந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்களது கோரிக்கைகளை கலெக்டரை சந்தித்து மனுவாக கொடுத்து வருவார்கள்.
இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் கலெக்டரை நேரடியாக சந்தித்து மனு கொடுக்காமல் அதற்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களது மனுக்களை போட்டு விட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகத்தில் மாஸ்க் அணிந்து வரவேண்டும், முதியவர்கள் குழந்தைகள் வரக்கூடாது போன்ற வழிமுறைகள் வைக்கப்பட்டு இருந்தது.
இதன்படி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்குள்ள புகார் பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர். நேற்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் சிலர் தங்களது கோரிக்கைகளை மனுவாக புகார் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையையடுத்த கருக்குபாளையம், பொன்னாங்காடு காலனி பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரியும், அடிப்படை வசதி செய்ய கோரியும் மனு கொடுக்க வந்தனர்.
இந்த மக்களில் பலர் முக கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியையும் பின்பற்றவில்லை. மேலும் அங்கு முதியவர்களும் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் எல்லோரையும் அழைத்து வந்தது அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற அமைப்பின் மாநில செயலாளர் சின்னசாமி என்பவர். அந்த நேரத்தில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தனது வீட்டிலிருந்து கலெக்டர் அலுவலத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நுழைவாயில் அருகே இந்த மக்கள் நின்றுகொண்டிருப்பதை பார்த்து உடனடியாக தனது காரை நிறுத்தி கீழே இறங்கி வந்த கலெக்டர் கதிரவன், அங்கிருந்த பொதுமக்களிடம் எதற்காக வந்துள்ளீர்கள் என கேட்டார்.
அந்த மக்கள் வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள் என கூற, அது சரி நீங்கள் எல்லோரும் முக கவசங்கள் அணியாமல் இருப்பதும், இடைவெளி இல்லாமல் கூட்டமாக நிற்பதும் தவறு. இப்போது நோய் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் இவ்வாறு வந்திருப்பது தவறு என அவர்களை எச்சரித்து அறிவுரை கூறியதோடு "உங்களையெல்லாம் யார் இங்கு இப்படி கூட்டி வந்தது?" என கேட்க "ஐயா நான்தாங்க... அண்ணா, புரட்சித் தலைவர், அம்மா திராவிட முன்னேற்ற கழக மாநில செயலாளர். என் பெயர் சின்னசாமிங்க" என ஒருவர் கூற "ஓ.. அப்படியொரு கட்சியா?" என கூறியவாரே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை அழைத்து "இதோ இந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யுங்க..'' என உத்தரவிட்டார் கலெக்டர் கதிரவன்.
"எனது தலைமையில் வந்தால் உங்க பிரச்சனை தீரும் என மக்களை நம்ப வைத்து அழைத்து வந்த அ.பு.அ.தி.மு.க. என்ற லெட்டர் பேடு கட்சி தலைவர் நடிகர் வடிவேலு பட காமடி போல் வழக்கில் மாட்டியதும், பிறகு அவர் போலீசிடம் கெஞ்சியதும் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பும், சிரிப்பை அடக்க முடியாத நிகழ்வாக இருந்தது.