Skip to main content

குடிமராமத்து என்கிற பெயரில் மணல் கொள்ளை! அ.தி.மு.க.-வினர் கைவரிசை!

Published on 12/07/2020 | Edited on 13/07/2020

 

 kanni kovil kulam thirumarugal nagapattinam

 

டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் குடிமராமத்துத் திட்டம் என்கிற பெயரில், விதிகளை மீறி இருபது அடிக்குமேல் தோண்டி மணல் கடத்தும் அவலம் அதிகரித்தபடியே இருக்கிறது. அந்த வகையில் நாகை அருகே குளத்தில் மணல் கடத்திச் செல்லும் வாகனத்தை மறித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

 

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிகோயில் குளத்தைக் குடிமராமத்துப் பணியின் கீழ் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை அப்பகுதியில் உள்ள அ.தி.மு.க.-வைச் சேர்ந்த ஒருவர் அரசின் அனுமதியைப் பெற்று செய்து வருகிறார். தூர்வாருகிறேன் என்கிற பெயரில் குளத்தில் அளவுக்கு அதிகமாக ஆழத்தில் மண் மற்றும் சவுடு மணலை எடுத்துக் கடத்தி விற்று வருகிறார். இதனை அப்பகுதி மக்கள் கண்டித்துள்ளனர். ஆனாலும் மக்களின் எதிர்ப்பை மதிக்காமல் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களில் அள்ளி வந்துள்ளார். 

 

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றுகூடி பொக்லைன் இயந்திரத்தையும், வாகனங்களையும் மறித்துப் போராட்டம் செய்தனர். "ஏற்கனவே ஆழமாக இருக்கும் இந்தக் குளத்தில் மேலும் அரசு அனுமதித்த அளவுக்கு அதிகமான ஆழத்தில் தோண்டி மண் எடுப்பது நியாயமா? இதனால் அருகிலுள்ள வீடுகள் பாதிக்கப்படாதா? அதை அரசும், அரசியல்வாதிகளும் சிந்திக்க வேண்டாமா? உடனே மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர் பொதுமக்கள்.

 

அதன் பின்னர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டது. அரசு அனுமதித்த அளவைத் தாண்டி மண் எடுப்பதில்லை  எனவும், குளத்தில் மண் எடுத்துக் கரைகளைப் பலப்படுத்துவது எனவும், ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களைச் சரியான முறையில் அளந்து தோண்டி எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

 

அதன்பிறகே போராட்டத்தைக் கிராம மக்கள் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்