இந்து கடவுள் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குநர் பாரதிராஜா மீது சென்னை வடபழனி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. நாராயணன் என்பவர் அளித்த புகாரில், “விநாயகரை இறக்குமதி செய்த கடவுள் என்றும், ஆண்டாளை மிக மோசமாக விமர்சித்த கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராடும் இந்துக்களை அச்சுறுத்தும் வகையில், ‘நாங்களும் ஆயுதம் எடுப்போம். வன்முறையில் ஈடுபடவும் தயங்க மாட்டோம். வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலை எடுக்கவும் தயங்கமாட்டோம்’ என்று பாரதிராஜா கூறியுள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட இயக்குநர் பாரதிராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்து, ‘பாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயலாகும். வழக்கு பெரிதல்ல; ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல. அவரை நாங்கள் சட்டப்படி மீட்டெடுப்போம்’ என்று தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.