சேலத்தில், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தேவை அதிகரிப்பால் குண்டு மல்லி கிலோ 1,000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே வஉசி மலர்ச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு, பனமரத்துப்பட்டி, குரால்நத்தம், ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து குண்டு மல்லி, சன்ன மல்லி, சாமந்தி, அரளி, ரோஜா, முல்லை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
ஆடி மாதப்பிறப்பு, ஆடி 18 விழா மட்டுமின்றி அனைத்து அம்மன் கோயில்களிலும் விழாக்கள் களை கட்டியுள்ள நிலையில், பூக்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக சேலம் மலர்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.
இன்று (ஆக. 3) ஆடிப்பெருக்கு விழா என்பதால், சேலம் மலர்ச்சந்தையில் பூக்களுக்கான தேவை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. வாடிக்கையாளர்கள், சில்லறை பூ வியாபாரிகள் போட்டிப்போட்டு பூக்களை வாங்கிச் சென்றனர். தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து இல்லாததால் சில வகை பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது.
அதன்படி, குண்டு மல்லி கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இரு நாள்கள் முன்பு வரை குண்டு மல்லி கிலோ 300 & 400 ரூபாயாக இருந்தது. முல்லை கிலோ 600 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 400 ரூபாய்க்கும், சம்பங்கி 200 ரூபாய்க்கும், காக்கட்டான் 320, அரளி 180, நந்தியாவட்டம் 180 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
குண்டு மல்லி மட்டும் அபரிமிதமாக விலை ஏறியுள்ளது. ஜாதி மல்லி, சாமந்தி, முல்லை ஆகிய மலர்கள் இரு நாள்களுக்கு முன்பு இருந்ததை விட நேற்று 100 முதல் 300 வரை விலை உயர்ந்து இருந்தது.