புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் ஊரைக் காக்கப் பெண் குழந்தைகள் பங்கேற்று நடத்திய வித்தியாசமான திருவிழா நடந்தது.
செரியலூர் கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த கொப்பயம்மாள் என்ற பெண் குழந்தை தனது பெரியப்பா வீட்டிற்கு காட்டு வழியாகச் சென்று காணாமல் போய், பல நாட்களுக்குப் பிறகுக் கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்திலிருந்து அம்மை நோய் தாக்கப்பட்டு இறந்து விழுந்ததாகக் கிராம மக்கள் கூறுகின்றனர்.
சிறுமி கொப்பியம்மாள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால் அதன் பிறகு ஊரில் யாரும் அம்மை நோயால் பலியாகக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு வீட்டில் பிறக்கும் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் ஊரைக் காக்கப் பொங்கல் நாளுக்கு மறுநாள் விரதம் இருந்து வீட்டில் வெண்பொங்கல் வைத்து, கன்று ஈனாத பசுங்கன்று சாணத்தில் ஒரு பெரிய பிள்ளையாரும் 92 கொழுக்கட்டைகளும் பிடித்து, அதில் கிருமிநாசினியான கூழைப்பூ, ஆவாரம்பூ, அறுகம்புல், வேப்பிலை, கரும்பு, வெல்லம் வைத்து மூன்று படையலிட்டு, இரண்டு படையல்களை ஓலை கூடையில் வைத்து கொப்பியம்மாள் இறந்த பழமையான பாலை மரத்தடியில் வைத்துக் கும்மியடிப்பர்.
அங்கு வழிபாடு நடத்தி ஊர்வலமாகத் தீர்த்தான் ஊரணிக்கரைக்குச் சென்று அங்கு ஓலைக்கூடையில் குழந்தைகள் கொண்டு வந்த பொருட்களைப் படையலிட்டு வழிபாடு நடத்துவர். இந்த விழாவில் சிறிய பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களின் அம்மா மற்றும் சகோதரிகள் ஓலைக்கூடைகளைத் தூக்கிச் செல்கின்றனர். வழிபாடுகள் முடிந்த பிறகே விரதம் முடியும்.
இப்படிச் செய்வதால் எங்கள் கிராமத்தில் அம்மையால் யாரும் இறப்பதில்லை. அதனால் முன்னோர்களின் வழிகாட்டல்படி தொடர்ந்து வழிபட்டு வருகிறோம். எங்கள் கிராமத்தின் நம்பிக்கை இது என்றவர்கள் எங்கள் ஊரைக் காக்க ஒரு நாள் விரதம் இருப்பதை பெருமையாக நினைக்கிறோம் என்றனர் பெண் குழந்தைகள்.
இதே நாளில் மற்றொரு பக்கம் இளைஞர்கள் போர்காய் தேங்காய் போட்டிகளை நடத்தி பலரையும் மகிழ்வித்துள்ளனர்.