புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தர்ம.தங்கவேல். இவருக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்க்கரை அளவு அதிகமாகி, தினசரி சிகிச்சை பெற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். கையில் ஊசி மாட்டப்பட்ட நிலையிலேயே வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். தேர்தல் முடிந்த பிறகு தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில், அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கியதால், தொடர்ந்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முழு உடல் நலத்துடன் இருப்பதாக உறவினர்கள், நண்பர்கள்களிடம் கூறியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து அவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தர்ம தங்கவேலின் தாய், மனைவி, மற்றும் குழந்தை என குடும்பத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.