
அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி லட்சுமிபிரியா, அரியலூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 9ஆம் தேதி செந்துறை பைபாசில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி கீழே விழுந்துள்ளார். அங்கு பணியிலிருந்த சக காவலர்கள் அவரை மீட்டு திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பிறகுதான் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, மார்ச் 1ஆம் தேதி அரியலூர் காவல்துறை துணைக்கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ராஜன், உதவி ஆய்வாளர் லட்சுமி பிரியாவைப் பார்த்தவுடன், "டி.எஸ்.பி. கென்னடியிடம் உன்னைப் பற்றி அனைத்து தகவல்களையும் கேட்டுவிட்டுதான் வந்திருக்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.
டி.எஸ்.பி., எஸ்.ஐ.க்கு காதல் வலை வீசியுள்ளார். அதற்காக லட்சுமிபிரியாவுக்கு பெரும்பாலும் இரவுநேர பணி ஒதுக்குவது, எந்தத் தகவலாக இருந்தாலும், காவல் ஆய்வாளருக்குச் சொல்லாமல் நேரடியாக தன்னிடமே சொல்லவேண்டுமென்று அன்புக் கட்டளையிட்டுள்ளார். இதனால் அரியலூர் காவல்நிலைய ஆய்வாளர் அலாவுதீனும் எந்தத் தகவலானாலும் டி.எஸ்.பி.யிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
லட்சுமி பிரியா மிகவும் நேர்மையாக நடந்துகொள்வார். யாரிடமும் பணம் வாங்கமாட்டார் என்று நாம் விசாரித்தவர்கள் நல்ல சான்றிதழ் கொடுக்கின்றனர். அவர் கடந்த 5ஆம் தேதி முதல் 3 நாட்கள் மேலதிகாரிகளிடம் முன்னறிவிப்பு கொடுக்காமல் விடுப்பு எடுத்ததால் அவரை திருச்சி காவலர் பயிற்சி பள்ளிக்கு மாற்றியதே தற்கொலை முயற்சிக்கு காரணமென கூறப்படுகிறது.
ஒரு பெண் எஸ்.ஐ. தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சி வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் யார் என்பது குறித்து காவல்துறை விசாரிக்குமா என்பதே சக பெண் காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இச்சம்பவம் குறித்து அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கானிடம் கேட்டபோது, “இதனை விசாரிக்க ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை நடந்து முடிந்தபிறகு சம்பந்தப்பட்டவர் யாரென அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
காவல்துறையில் பெண் காவலர்களுக்கு உயரதிகாரிகளால் பிரச்சனை என்ற குற்றச்சாட்டு ஒன்றும் புதிதல்ல. ஆனால், அத்தகைய புகார்கள் நேர்மையாக விசாரிக்கப்பட்டு, குற்றம் இருப்பின் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான். அதற்கு, காவல்துறை தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் இத்தகைய பிரச்சனைகள் மீது அக்கறை காட்ட வேண்டும்.