சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக கனமழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறு, குளம் மற்றும் வாய்க்கால்கள் நிரம்பி வழிகிறது. இதனையொட்டி சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தின் அருகே ஓடும் வாய்க்காலில் அதிகளவு மழை நீர் செல்கிறது.
இந்நிலையில் இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரில் முதலைக்குட்டி ஒன்று அடித்து வந்துள்ளது. இந்த முதலை குட்டி வாய்க்காலின் கரையில் வியாழக்கிழமை மதியம் இரைதேடி படுத்திருந்துள்ளது. இதனை வாய்க்கால் கரையில் வந்த நாய் ஒன்று பார்த்து முதலையை கவ்வி பிடிக்க ஓடியது. முதலை குட்டி நாய் வருவதை அறிந்து பயந்து போய் வாய்க்கால் தண்ணீரில் இறங்கியது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வைரல் ஆக்கி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் வனத்துறையினர் வாய்க்கால் மற்றும் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் முதலை மற்றும் முதலை குட்டிகள் தங்கி இருக்கும் வாய்ப்பு உள்ளது எனவே பொதுமக்கள் கால்நடைகள் வாய்க்காலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.