திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன.
திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'முன் காலங்களில் அதிமுகவிற்காகவும், தேமுதிகவிற்கும் ஆதரவு தெரிவித்து பணியாற்றியதால் அந்த உரிமையோடு கேட்கிறேன் அதிமுகவினர், தேமுதிகவினர் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்' என மேடையில் பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நாம் தமிழர் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து இருந்தனர்.
இதனால் அதிமுக மற்றும் தேமுதிக வாக்குகளைப் பெற நாம் தமிழர் தீவிரம் காட்டுவதாக கருத்துக்கள் எழுந்தது. அதேநேரம் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 'தாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவெடுத்ததுள்ளதால் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாது' எனத் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.
அதேநேரம் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவின் ஆதரவை நேரடியாக கோரியுள்ளார். முன்னதாக அவருடைய பிரச்சார மேடையில் இடம் பெற்றிருந்த பேனரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அடையாளமாக மோடியுடன் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதோடு மட்டுமல்லாது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'நாங்கள் தேர்தலை புறக்கணித்து விட்டோம் என்பது எங்களுடைய கட்சி தொண்டர்களுக்கும் தெரியும். ஆனால் அதிமுக கூட்டணி இல்லாத பாமக மேடையில் ஜெயலலிதா புகைப்படம் வைப்பது என்பது செய்யக்கூடாத ஒன்று. ஆனால் இன்று அதைச் செய்கிறார்கள் என்றால் அது சந்தர்ப்பவாத அரசியல் நோக்கமாகத்தான் இருக்கும். அப்படித்தான் அதைக் கருத வேண்டும். அதேநேரம் படத்தை போடாதீர்கள் என்று நாங்கள் சொல்ல முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.