காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று அனைத்து தமிழகம் முழுவதும் வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. அதேபோல் வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த கடையடைப்பானது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடரும் என வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
மேலும், இந்த போராட்டத்தில் மருந்து வணிகர்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மருந்து தேவைக்கு 044-28191522 என்ற எண்ணை அழைத்தால் மருந்துகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. போராட்டம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் பழங்கள், காய் கறிகள், பூக்கள் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரவில்லை என தெரிகிறது. இதனால் பரபரப்பாக இயங்கும் கோயம்பேடு சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.