நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வயிற்று வலி காரணமாகத் தனியார் மருத்துவமனைக்குச் சென்று பெண் ஒருவருக்குத் தனியார் மருத்துவமனை மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததால், தர்ம அடி வாங்கிய சம்பவம் திருப்பத்தூரில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் வயிற்று வலிக்காக மருத்துவம் பார்க்கச் சென்ற பெண்ணும் மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது.
திருப்பத்தூர் போஸ்கோ நகர்ப் பகுதியைச் சேர்ந்த 22 வயதான பெண் பல் மருத்துவருக்குச் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென நள்ளிரவில் வயிற்று வலி ஏற்பட்டது. இதன் காரணமாகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கு இரவு நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் இல்லை என்ற காரணத்தால் அதே பகுதியில் உள்ள 24 நேரம் செயல்படும் தனியார் அவசர சிகிச்சை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த தியாகராஜன் என்ற மருத்துவர் வயிற்று வலிக்காக வந்த பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெண் மருத்துவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''செக் பண்ண வேண்டும் படும்மா என்று சொன்னாரு. நான் 'ஏற்கனவே இந்த பிரச்சனை இருக்கிறது. எனக்கு அடிக்கடி இப்படித்தான் வயிற்று வலி ஏற்படும். டேப்லெட் நான் வாங்கி போட்டுக் கொள்வேன் மெடிக்கலில்' என்று சொன்னேன். 'டேப்லெட் இப்போது செட் ஆகவில்லை. அதனால் இன்ஜெக்ஷன் போட்டுக்கொண்டு செல்லலாம்' என்று சொன்னேன். 'இன்ஜெக்ஷன் மட்டும் போடுங்க. காலையில் நான் ரெகுலராக பார்க்கக்கூடிய டாக்டரை பார்த்துக் கொள்கிறேன்' என்று சொன்னேன். அவர் அதற்கு 'ஒரு டைம் செக் பண்ணி பார்க்கலாம் படு என்று சொல்லிவிட்டார். ஒரு பெண்ணை மருத்துவ சோதனை செய்யும் பொழுது கண்டிப்பாக ஒரு பெண் செவிலியர் இருக்கணும். ஆனால் அங்கு பெண் செவிலியர் யாரும் இல்லை.
என்னுடைய சகோதரனையும் வெளியே நிற்கச் சொல்லிவிட்டார். என்னை செக் பண்ணும் பொழுது, பேண்ட்டை கழட்டுங்கள் அப்பொழுதுதான் எங்கு வலிக்கிறது என்று தெரியும் எனச் சொன்னார். நானும் மெடிக்கல் ஃபீல்ட்டில் தான் இருக்கிறேன். வலி இருந்தால் எங்க செக் பண்ண வேண்டும் என எனக்கும் தெரியும். ஆனால் அவர் மிஸ் பிகேவ் பண்ணி எங்கெல்லாம் கை வைக்கக்கூடாதோ அங்கெல்லாம் கை வைத்தார். எனக்கு பிடிக்கவில்லை. ட்ரீட்மெண்ட் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். பின்னர் தனது உறவினர்களுடன் சென்று நியாயம் கேட்ட பொழுது, மருத்துவர் தாக்கியதால் பதிலுக்குத் தாங்களும் தாக்கியதாக'' பெண் மருத்துவர் தெரிவித்தார்.
இந்தப் புகாரின் பேரில், திருப்பத்தூர் நகரக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்குப் பின் மருத்துவர் தியாகராஜனை கைது செய்தனர்.