
பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கொடூரமாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில், பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாவலர் கிராமத்தில் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை நான்கு பேர் கொலை வெறித்தனமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. அதில் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் அலறி துடித்து அடிக்க வேண்டாம் என கெஞ்சும் நிலையில் சிலர் கொடூரத் தாக்குதல் நடத்தும் காட்சிகள் பார்ப்போரை கலங்க வைத்தது.
இந்த வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபகுதியைச் சேர்ந்த முருகவேல், அருண், நிகாஷ், ரஞ்சித் ஆகிய நான்கு பேர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கொடூரமாக தாக்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதில் முக்கிய நபராக கருதப்படும் முருகவேலை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மற்ற மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். நான்கு பேரும் மதுபோதையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியது தெரியவந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் அரிசியைத் திருட முயன்றதாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.